×

நாகை மாவட்ட விவசாயிகளுக்கு 100% மானியத்தில் ஏக்கருக்கு 2 மூட்டை யூரியா-குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல்

நாகை : நாகை கலெக்டர் அலுவலகத்தில் ஆன்லைன் வாயிலாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.கலெக்டர்அருண்தம்புராஜ் தலைமை வகித்தார். நாகை, கீழ்வேளூர், திருமருகல், தலைஞாயிறு உள்ளிட்ட 6 வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் இருந்து விவசாயிகள் ஆன்லைன் வாயிலாக தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். நாகை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஆன்லைன் வாயிலாக கலெக்டர் அருண்தம்புராஜ் பதில் அளித்தார். இதன்படி நாகை வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விவசாயிகள் பேசியதாவது:

சரபோஜி: 2019 -20ம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டுத் தொகையை கால தாமதம் இன்றி வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்ய வருவாய்த்துறை மூலம் உரிய காலத்தில் சிட்டா அடங்கல் வழங்க வேண்டும் என்றார்.ராஜேந்திரன்: கடந்த ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு தொகையை இந்த பேரிடர் காலத்தில் வழங்க வேண்டும். அப்பொழுது தான் விவசாயிகள் நடப்பு குறுவை சாகுபடி பணியை தொடங்க முடியும் என்றார்.

காளிமுத்து: ஒரத்தூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கீழ்வேளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த மே மாதம் 13ம் தேதி 500 குவிண்டால் பச்சைபயிறு போடப்பட்டது. 40 நாட்களை கடந்த நிலையிலும் சம்பந்தப்பட்ட விவசாயிகள் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை. பயிருக்கான பணம் கிடைத்தால் தான் அடுத்த கட்ட விவசாய பணிகளை தொடங்க முடியும் என்றார்.

கலெக்டர்: நாகை மாவட்டத்தில் நடப்பாண்டு 20 ஆயிரம் ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தின் மூலம் விவசாயிகள் பயன் பெற வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் நெல் விதைகள் 50 சத மானியத்திலும், 100 சத மானியத்தில் உரங்கள் மற்றும் பசுந்தாள் உர விதைகள் வழங்கப்படும். மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள், பண்ணைக் குட்டை அமைத்திடவும் திட்டமிடப்படப்படுள்ளது.

உரங்களைப் பொறுத்தமட்டில் ஏக்கருக்கு இரண்டு மூட்டை யூரியா (90 கிலோ), ஒரு மூட்டை டிஏபி (50 கிலோ), அரை மூட்டை பொட்டாஷ் (25 கிலோ) ஆகியவை 100 சத மான்யத்தில் வழங்கப்படும். ஒரு விவசாயி அதிகபட்சமாக இரண்டு ஏக்கருக்கு மட்டுமே பயனடைய இயலும். இதற்கான உரிய விண்ணப்பங்களை தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர், வேளாண்மை விரிவாக்க மையங்களில் பெற்று பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும் என்றார். வேளாண்மை இணை இயக்குனர் பன்னீர்செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Urea ,Nagy District , Nagai: An online farmers' grievance meeting was held at the Nagai Collector's Office.
× RELATED விவசாய தேவைக்காக 1461 டன் யூரியா ரயில்...